சென்னை, கோவை, நெல்லை தொட்டுத் தொடரும் கொரோனா!!!

தமிழகத்தில் சென்னை தவிர கோவை, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் விஸ்வரூபமெடுத்துள்ள கொரோனா சென்னையை தாண்டி தற்போது தென்மாவட்டங்கள் வரை பரவி வருகிறது, இதையடுத்து தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவை திரும்பிய மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். 25 வயதான அந்த மாணவி ஸ்பெயினில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், கொரோனா பரவியதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

விமானத்தில் தாயகம் திரும்பியபோது கொரோனா அறிகுறி இல்லாததால் வீட்டில் தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், மாணவியுடன் இருந்த நண்பருக்கு பிரேசிலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனால், மாணவி கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உறவினர்கள், நண்பர்கள், பயணத்தின் போது உடன் இருந்தவர்கள் என அனைவரையும் கண்காணிப்புக்குள் கொண்டு வர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 வயது பெண்ணுக்கும், துபாயில் இருந்து தமிழகம் வந்த 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது நேற்றே உறுதியாகி இருந்தது.

கலிபோர்னியாவில் இருந்து வந்த பெண் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், துபாயில் இருந்து வந்தவர் நெல்லை மருத்துவக்கல்லூரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

What do you think?

‘கொரோனா வைரஸ் உயிரிழப்பு’ 15 ஆயிரத்தை தாண்டியது!

டோக்கியோவால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு?