கொரோனா வைரஸ் தடுப்பூசி; மனிதர்களிடம் பரிசோதனை!

உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு, மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது, இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மருந்து மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும், மசாசூசெட்ஸ் மாநிலத்தில் செயல்படும் கேம்பிரிட்ஜின் மாடெர்னா என்ற உயிரி தொழில்நுட்பமும் இணைந்து, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. நார்வே நாட்டை சேர்ந்த சி.இ.பி.ஐ என்ற ஆராய்ச்சி கட்டளையும், இதற்கான நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

இதனைதொடர்ந்து, எம்.ஆர்.என்.ஏ. 1273 என குறிப்பிடப்படும் இந்த தடுப்பூசி மருந்தின் சக்தி கொரோனா வைரஸை முறியடிக்கும் திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக மனிதர்கள் மீதான பரிசோதனையும் தொடங்கியுள்ளது.

இந்த சோதனையில் தாங்களாக முன்வந்த 18 முதல் 55 வயது நிரம்பிய ஆரோக்கியமான 45 பேரை தேர்வு செய்து, 6 வாரங்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளது. சியாட் நகரில் நடைபெற்று வரும் இந்த பரிசோதனை திட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களில் முதலில் ஒருவருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.

முதல்கட்ட பரிசோதனை என்பது சாதனை வேகத்தில் தொடங்கியுள்ளதாகவும், விரைவாக தடுப்பூசி மருந்தை நடைமுறைக்கு கொண்டு வருவதே நோக்கம் எனவும் அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

மனிதர்கள் மீதான கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கிவிட்டாலும், பாதுகாப்பானதுதான் என உறுதிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தமிழகத்தில் 37 பேருக்கு கொரோனா!

ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ்? – புதிய சிக்கலில் இந்திய பொருளாதாரம்!