கொரோனா வைரஸ் பரவியதாக போலி பிரேக்கிங் நியூஸ் – 3 இளைஞர்கள் கைது

கொரோனா தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கண்டு அச்சத்தில் உறைந்து போயுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 7,331 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 85 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், இந்தியாவில் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என மத்திய, மாநில அரசுகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா பாதிப்பால் இரண்டு இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பியுள்ளனர். அதனை தொலைக்காட்சியில் செய்தி வருவதைப் போன்றே மிக தத்ரூபமாக தயார் செய்து வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.

அந்த வீடியோவின் புகைப்படங்களில் இருந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலியாக வீடியோ தயாரித்த சிவக்குமார், சுகுமார், விஜயன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உலகமே கொரோனாவைக் கண்டு மிரண்டிருக்க அதன் விபரீதம் தெரியாமல், இளைஞர்கள் விளையாட்டாக வீடியோ செய்து வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

கொரோனாவால் அமேசானில் 1 லட்சம் பேருக்கு வேலை!

கொரோனா வைரஸ் – வேடந்தாங்கல் சரணாலயம் மூடல்