கேரளாவில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா – தேர்வுகள் ரத்து

கேரளாவில் ஏற்கனவே கொரோனா வைரஸால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் மிரட்டி வருகிறது. இதுவரை இந்நோய் தொற்றால் 3,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் வேகமெடுத்துள்ளது. ஏற்கனவே கொரோனாவால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே கடந்த மாதம் இறுதியில் இத்தாலியில் இருந்து பத்தினம்திட்டா திரும்பிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தோஹா வழியாக கொச்சி வந்து அங்கிருந்து பத்தினம்திட்டா சென்றிருந்தனர். மேலும், இவர்கள் மூலமாக இவர்களின் உறவினர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாட்டிலிருந்து தனது பெற்றோருடன் கேரளா திரும்பிய 3 வயது குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கேரளாவில் ஏற்கெனவே 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இத்தாலியிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என 11 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

கேரளா

மேலும், ஐரோப்பிய நாட்டிலிருந்து தனது பெற்றோருடன் வந்த 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அந்தக் குழந்தையின் பெற்றோரும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 12 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

149 மருத்துவமனைகளில் 1,116 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டனர். அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், ஒன்றாம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம், 9, 10 மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடக்கும். மாணவர்கள் யாருக்கேனும் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்காணிப்பில் இருந்தால் அவர்கள் தனி அறையில் தங்கவைக்கப்பட்டுத் தேர்வெழுத வைக்கப்படுவார்கள்.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் இந்த மாதம் இறுதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதரஸாக்கள், டுடோரியல், காலேஜ் ஆகியவையும் மாத இறுதிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண விழாக்கள் நடத்தத் தடையில்லை. அதேசமயம், மக்கள் அதிகமான அளவில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல சபரிமலைக்குப் பக்தர்கள் அதிகமாகச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

What do you think?

‘மாஸ்டர்’ 2-வது சிங்கிள் டிராக் – அனிருத்தின் மசாலா குத்து

“சட்டம் – ஒழுங்கு பிரச்சினை இல்லை” – ரஜினி வழக்கு தள்ளுபடி