சீனாவில் சிறைகளையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்!

சீனாவில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ், தற்போது அந்நாட்டிலுள்ள சிறைகளிலும் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து உருவாகிய இந்த கொடூர வைரஸ் சீனா மட்டுமின்றி, 25-க்கும் அதிகமான நாடுகளிலும் பரவியுள்ளது. 50 நாட்களை கடந்த நிலையில் இன்னும் இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள ரெஞ்செங் சிறையிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது அந்நாட்டினரை மேலும் பதற்றமடைய வைத்துள்ளது. சிறையில் உள்ள 7 போலீசாருக்கும், 200 கைதிகளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஜெஜியாங் மாகாணத்தில் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஹூபே மாகாணத்தில் உள்ள சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் உள்ள சிறுவனுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

சிறைகளில் நோய் தொற்று இருப்பவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்காமல், கவனக்குறைவாக இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மகளிர் சிறை வார்டன், நீதித்துறை தலைவர், ஷிலிபெங் சிறைத்துறை இயக்குநர் உள்ளிட்ட 10 அதிகாரிகளை சீன அரசு பதவிநீக்கம் செய்துள்ளது. சிறையில் மற்ற கைதிகளுக்கு நோய் தொற்று உள்ளதா என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

What do you think?

இந்தியாவில் கூடுதலாக வரி விதிக்கிறார்கள்; டிராம்ப் குற்றச்சாட்டு

“நித்யானந்தாவின் ஆன்மீக ஆராய்ச்சிக்கு நான் ரெடி” – மீரா மிதுன் அதிரடி