“கொரோனா வைரஸ் உயிரிழப்பு 902 ஆக அதிகரிப்பு; 5000-ஆக அதிகரிக்கலாம் என்றும் கணிப்பு”!!!

சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 902-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை 5000-ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தனது ருத்ரதாண்டவத்தை இன்னும் நிறுத்தியபாடில்லை. சீனாவை கடந்து உலகின் மற்ற நாடுகளுக்கும் இது பரவியிருந்தாலும், சீனாவில் தான் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் சீன மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். மேலும், இந்த வைரஸ் பரவுவது குறித்து அரசுக்கு முன்னமே தெரிந்திருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அரசின் மீதும் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்தில் இருந்து உருவாகியது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்கினால் லேசான ஜலதோஷம் ஏற்பட்டு குளிர் நடுக்கம் ஏற்படும். பின்னர் இது நெஞ்சு வலியாக உருவாகி இறுதியில் உயிரையே பறித்துவிடும் அளவுக்கு கொடூரமானது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து சீனாவில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதுவரை எவ்வித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்க முடியாமல் சீன அரசும் கவலையில் ஆழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மட்டும் கொரோனா வைரஸ் புதிதாக 3123 பேருக்கு பரவியுள்ளது, மொத்தமாக 40 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 902 ஆக அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக நேற்றைய தினம் மட்டும் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் சீன மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சீன அரசு பல உண்மைகளை மறைக்கிறது என்றும் புகார் எழுந்துள்ளது, கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை 1000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்கள் குற்றசாட்டியுள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் முன்பைவிட தற்போது வேகமாக பரவி வருகிறது என்றும், இதனால் இம்மாத இறுதிக்குள் 5000 பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் உலகமே தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனால் உலகின் மற்ற நாடுகளும் கொரோனா வைரஸூக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

What do you think?

92-வது ஆஸ்கர் விருது பட்டியல் – ஜோக்கரை முந்திய பாராசைட்

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு அற்புதம்மாள் வலியுறுத்தல்!