நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். அவர் வாழ்ந்த வீட்டிற்கு அன்னை இல்லம் என பெயரிட்டார். இந்நிலையில், சிவாஜி பேரன் துஷ்யந்த் கடனை திருப்பி செலுத்தாததால், நீதிமன்றம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. இது சிவாஜி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.9 கோடி கடனுக்காக பல கோடி மதிப்புள்ள அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில், அன்னை இல்லம் முழுவதும் தனக்கு சொந்தமானது. இந்த வீட்டில் தனது அண்ணன் ராம்குமார் அவன் மகன் துஷ்யந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை . எனவே, அன்னை இல்லத்தை ஏலத்துக்கு விடும் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென நடிகர் பிரபு நீதிமன்றத்தில் முறையீட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதில் இருந்து நீதிமன்றம் விலக்கு அளித்து இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்றும் அதனால் அவரது வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.
அதோடு, ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறித்து வில்லங்கப் பதிவில் திருத்தம் செய்யும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டிருக்கிறார்.