அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் நபர் நேற்று(மார்ச்.10) உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57) என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. ஆனால், பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளால் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவராக பென்னட் இருந்தார்.
இதனால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அனுமதி வழங்கியது.அதேசமயம், டேவிட் பென்னட் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி பென்னட்டுக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நீடித்த நிலையில்,அவருக்கு பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள். இதன்மூலம்,பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் நபராக டேவிட் பென்னட் உள்ளார்.
இருப்பினும், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பன்றியின் இதயம் பொருத்திய 2 மாதத்தில் டேவிட் பென்னட் அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உயிரிழந்துள்ளார்.
இதற்கான காரணத்தை மருத்துவர்கள் சரியாக தெரிவிக்கவில்லை. எனினும், கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மோசமடையத் தொடங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.