7 நாள் போராட்டத்திற்கு பின் தீபக் ராஜா உடல் ஒப்படைப்பு..! மீண்டும் பரபரப்பான நெல்லை..!
நெல்லை பாளையங்கோட்டை அருகே கடந்த மே 20ம் தேதி தீபக் ராஜா என்ற ரவுடி காதலியுடன் சாப்பிட வந்த போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அது பெரும் பேசுபொருள் ஆனது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 6 தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிர படுத்தினர்.
ஆனால் இந்த 4 பேர் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றும், தீபக் ராஜாவை வெட்டிக் கொலை செய்த நிஜ குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற்றுச்செல்ல மாட்டோம் என கடந்த 7 நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடியுள்ளனர். பின் இந்த கொலைக்கு காரணமாக இருந்த மர்ம நபர்களை திருச்சியில் கைது செய்துள்ளனர். இதற்கு காரணமாக இருந்த கூலிப்படை தலைவன் நவீன், லெஃப்ட் முருகன், லட்சுமி காந்த், சரவணன் ஆகிய நான்கு பேரை விரட்டி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவல்துறையினர் நெல்லை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வடிவேல் முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக, பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் தீபக் ராஜாவை கொலை செய்ததாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், தீபக் ராஜாவை கொல்ல வடிவேல் முருகன் தரப்பினர், கூலிப்படையை சேர்ந்த நவீன் என்பவரை சந்தித்து இந்த கொலையை செய்ய சொன்னதாக கூறியுள்ளார்.
தற்போது இக்கொலை வழக்கில் முக்கிய கொலையாகிகள் கைது செய்யப்பட்ட பின்னரே தீபக் ராஜாவின் உடலை 7 நாட்கள் போராட்டத்திற்கு பின் அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உடல் எடுத்துச் செல்லப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு காவல் துணை ஆணையர்கள் தலைமையில் முக்கியமான பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் முக்கிய கிராமங்களில் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வாகைக்குளம் பகுதியில் முக்கியமான தலைவர்களின் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து தீபக் ராஜாவின் உடல் வஜ்ரா வாகனத்தோடு போலீஸ் படை சூல சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது தீபக் ராஜாவின் ஆதரவாளர்கள் 500 க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போட பட்டிருந்தாலும், மறுபக்கம் கலவரம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நெல்லையே பரபரப்பாக உள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..