தமிழ்நாடு ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்துத்துவ கருத்துக்களை தமிழ்நாட்டில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சில சங்க பரிவார் இயக்கங்கள் செயல்பட்டு கொண்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என் ரவியும் அதற்கு துணையாக பேசுகிறார். திருக்குறளை பற்றி ஆல்பர்ட் ஸ்விட்சர்ரை விட ஆராய்ச்சி செய்துவிட முடியாது. உலகில் இப்படி ஒரு பொதுவான நூல் இல்லை என்று நோபல் பரிசு பெற்ற அவரே கூறியிருக்கும் நிலையில், திருக்குறளை பற்றி தெரியாமல் ஆளுநர் பேசுவதாக தெரிவித்தார். ஜி.யு போப்பும் திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார்.
அவர் ஒன்றும் தவறாக மொழிபெயர்க்க வில்லை. ஆனால் இங்கு இருக்கிற கூட்டம் திட்டமிட்டு பேசி வருகின்றனர். அதற்கு ஆளுநர் துணை போவது மிகவும் துரதிஷ்டமான செயலாக உள்ளது என்றார். இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்த கேள்விக்கு இன்னும் 14 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்.
அவர் திராவிட முன்னேற்றக் கழக அரசு, திராவிட மாடல் அரசு, ஆருயிர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அரசு அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு, இன்னும் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார் என்றார். நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, அவர்கள் மனம் போன போக்கில் எல்லாம் பேசுகிறார்கள் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.