“எல்லோருக்கும் எல்லாம்..” துணை பதிவாளர்களுக்கான பணியிடை பயிற்சி..!!
பல்கலைக்கழகப் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்களுக்கான பணியிடை பயிற்சியினை உயர் கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் இன்று சென்னை தனியார் ஹோட்டலில் பல்கலைக் கழகப் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்களுக்கான பணியிடை பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “எல்லோருக்கும் எல்லாம்” என்கிற சமூகநீதியின் சாரத்தைப் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரவலாக்கியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம், சம வாய்ப்பு; சமநீதி, சமூகநீதி என்பதை உயர்கல்வியில் நிலைநாட்டியிருக்கின்றோம்.
தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரவரிசையில் இடம்பெறுவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுப்புகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நமது மாநிலத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்களுக்கு நிர்வாகத்திறன் மற்றும் செயல்திறன் சார்ந்த அணுகுமுறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சி வழங்குகிறது.
நமது பல்கலைக்கழகங்கள் பொதுமக்களிடம் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை பெற வேண்டும் என்பதற்கான அடிப்படை, திறமையான நிர்வாகத்தை உறுதி செய்வதின் மூலமே நடக்கும்.இத்தகைய பயிற்சிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், நிதி மேலாண்மையையும் மேலும் வலுப்படுத்தும்.
ஒரு நிறுவனத்தின் பணி சிறப்பாக அமையவேண்டுமானால் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் திறமை மிக்கவர்களாகவும், தனது பணியின் தன்மையை முழுவதும் அறிந்து செயல்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்குபணியாளர்களுக்கு வழக்கமாக பயிற்சிஅளிப்பது அவசியம். இதன் அடிப்படையில் மாநில உயர்கல்வி மன்றம் ஏறக்குறைய 1,000 கல்லூரி பேராசிரியர்களுக்கு கற்பித்தல் முறை குறித்து ஏற்கனவே பயிற்சி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் உயர் கல்விச் சூழலை மேம்படுத்துவதில், அரசு பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளின் முதன்மை பொறுப்பாளர்களாக திகழும் பதிவாளர்களுக்கும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் தற்போது65 உயர் அலுவலர்கள்பங்கேற்றுஉள்ளனர்.
சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் அதிகளவில் அரசு பல்கலைக் கழகங்களில் நடைபெற ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் அவர்களின் பங்களிப்பு மற்றும் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச பல்கலைக் கழங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு நமது மாணவச் செல்வங்கள் உலகளவில் உயர்ந்து நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக் கழக அளவில் ஒரு நிபுணர் குழுவை (பல்கலைக்கழகம், உயர்கல்வி, மனித வள மேம்பாடு மற்றும் நிதி துறைகள்) அமைத்து மிக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைப்பத்திகளை பரிசீலித்து தீர்வுகாண வேண்டும்.
இந்த பயிற்சி வழங்குவதன் மூலம் நிர்வாகத்தில் உள்ள சவால்களுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை வகுப்பதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான திட்டமிடலுக்கான தெளிவான பார்வையை உருவாக்கும் மையமாகவும், பொறுப்புணர்வும் திறனும் நிரம்பிய நிர்வாகத்தை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான தளமாகவும் செயல்படும் என உறுதி அளித்தார்.
உயர்கல்வியில் உச்சம்தொட பல்கலைக்கழக நிர்வாகத்தில் போதுமான முன்னெடுப்புகளை செய்ய இந்த பயிற்சியினை முழுமையாக பெற்று பயனடைய வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உயர்கல்விமன்ற துணைத்தலைவர் எம்.பி.விஜயகுமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.