அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா.. பக்தர்கள் பங்கேற்பு..
குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 11-ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கண்டு தரிசித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வில்லியநல்லூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 11 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.
கடந்த ஏழாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழாவில் விரதம் இருந்த பக்தர்கள் இன்று குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து சக்தி கரகத்துடன் மஞ்சள் உடை உடுத்தியும், அலங்கார காவடி, கூண்டு காவடி எடுத்தும் மேல வாத்தியங்கள் கேரள செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
அங்கு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தீமிதி விழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
-பவானி கார்த்திக்