சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று மாலை உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுக சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளாரே? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
டிடிவி தினகரன் அதிமுகவின் ஊழல் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முதலில் தினகரன் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும். அவர் லண்டனில் சொத்து உள்ளது. அதை கண்டுபிடித்து அரசு உடைமையாக்கிட வேண்டும் என்றார்.
தொடர்ந்து கூறிய அவர், ஆட்சியில் இருந்தால் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அதிமுக வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல் வதந்தி பரப்புகிறார்கள் என்றார். அப்போது அண்ணாமலை வெளியிட்டதும் அப்படித்தானே, என்ற கேள்விக்கு ? கற்பனையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. அதனை அண்ணாமலையிடம்
தான் கேட்க வேண்டும் என்றார்.
ஓபிஎஸ் மாநாடு நடத்துகிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி, விரக்தியின் விளிம்பில் ஓபிஎஸ் பேசி வருகிறார். அவரது கருத்தை கண்டு கொள்ளத் தேவையில்லை. முதலில் தர்மயுத்தம் என்றார். இப்போதும் தர்மயுத்தம் என்கிறார். அவரது தர்மயுத்தம் என்ன என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொண்டார்கள் என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ஒருங்கிணைப்போம் என சசிகலா கூறியுள்ளாரே? என்றதற்கு, அவர் சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. சசிகலா சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நான் அரசியலில் இல்லை என அறிக்கை வெளியிட்டார். எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா புகழின் அடிப்படையில் என் தலைமையில் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். கூட்டணியோடு 75 பேர். இவ்வளவு பேர் வெற்றி பெறுவார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை. தற்போது அதிமுக வலிமை இருப்பதால், இப்போது இதுபோல சொல்லி வருகிறார் என்றார்.
பெரியகுளத்தில் காவல் நிலையம் மீது நடந்த தாக்குதல் குறித்த கேள்விக்கு…. திமுக திறமையற்ற அரசாங்கம், பெரியகுளத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தரப்படவில்லை. முதல்வருக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு தரப்படுவதில்லை. திமுக அரசு செயலிழந்துள்ளது என்றார்.