ராட்டிணம் அமைப்பதில் தகராறு.. இரு தரப்புக்கும் இடையே சண்டை.. 18 பேர் மீது வழக்குப் பதிவு..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மேல் நிம்மியம்பட்டு, காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்.
இவர் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் ரங்க ராட்டினம் அமைத்து தொழில் செய்து வந்துள்ளார். இதே போல் சென்னை மணலி பகுதியை சேர்ந்த சுஜாதா என்பவர் திருவிழா நடைபெறும் இடங்களில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வெங்கடேசன் உடன் சேர்ந்து சுஜாதா ஒன்றாக ராட்டினம் அமைத்து தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் இருவரும் ராட்டினம் அமைத்த போது வெங்கடேசனின் மகன்கள் இளவரசன் மற்றும் வல்லரசு ஆகியோர் சுஜாதாவை தங்களுடன் சேர்ந்து ராட்டினம் அமைக்க வேண்டாம் தனியாக அமைத்துக் கொள் என்று கூறியுள்ளனர்.
அப்போது இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் சுஜாதாவை வெங்கடேசனின் மகன்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை சுஜாதா சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வரும் தனது மகன் ஸ்ரீ ராமிடம் கூறியுள்ளார்.
சம்பவம் அறிந்த ஸ்ரீ ராம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 10 க்கும் மேற்பட்டோரை சென்னையில் இருந்து காரில் அழைத்து வந்து வெங்கடேசனின் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வெங்கடேசனின் வீட்டு ஜன்னல் கண்ணாடி மற்றும் வெளியில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால் செய்வதறியாமல் நின்ற வெங்கடேசனின் மகன்கள் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் கிராம மக்கள் ஒன்று கூடி ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியும், அவர்கள் வந்த கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சென்னையை சேர்ந்த சுஜாதா மற்றும் அவரது மகன் ஸ்ரீராம் அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் அருண், விக்னேஷ், சுமலதா, இந்திரா ஆகிய ஆறு பேருக்கு தலை மற்றும் கைப்பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மேல்நிம்மியம்பட்டு, காந்திபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி கோமதி மகன்கள் இளவரசன் வல்லரசு ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இரு தரப்பினரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆலங்காயம் காவல்துறையினர் சம்பவம் குறித்து இரு தரப்பினர் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே திருவிழாக்களில் ராட்டினம் அமைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் படுகாயமடைந்தும், கார் கண்ணாடி மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்