திருச்சியில் திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் இன்று காலை சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதேபோல், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று திருச்சி சிவா வீட்டின் அருகே சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து மைதானத்தினை திறந்து வைக்க நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு வந்துள்ளார். இந்நிலையில் திறப்பு விழாவுக்கான கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை எனக்கூறப்படுகிறது. இதற்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும், அமைச்சர் நேருவின் காரை வழிமறித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அமைச்சரின் ஆதரவாளர்கள் கே.என். நேரு கார் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி அமர்வு நீதிமன்ற காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.