தடபுடலாக ரெடியாகும் தவெக மாநாடு ஏற்பாடுகள்..!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருப்பதால் அதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாட்டு முகப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் படங்கள் ஆகியவை இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கிறது. தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை வெகு விமர்சையாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மாநாட்டுக்கு சில வழிமுறைகள் தெரிவித்ததை பார்க்கலாம் வாங்க;
1. மது அருந்தி விட்டு வரக்கூடாது, மீறி மது அருந்தி விட்டு வந்தால் மாநாட்டு திடலுக்குள் வர அனுமதி மறுக்கப்படும்.
2.மூத்த குடிமக்கள், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும், மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வருபவரோடு பின்னால் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வர வேண்டும்.
3.போக்குவரத்து விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
4.காவல் துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட மாநாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது பெரும் வரவேற்பை பெற்றது.
மாநாட்டுக்காக கோட்டை மதில் சுவர் இரு கால்களை தூக்கி பிளிறும் யானைகளின் உருவங்கள் முகப்பில் உள்ளன. யானைகளுக்கு மேல் விஜய்யின் புகைப்படம் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மாநாடு பந்தலில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை வரையில் 30 அடி உயர கொடிக்கம்பத்தில் நூற்றுக்கணக்கான கொடிகள் பறக்குமாறு அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 600க்கும் மேற்பட்ட கம்பங்களில் தவெக கொடி பறக்கும் நிலையில், மாநாடு நடைபெறும் பகுதி முழுவதும் 15,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகின்றனர்.
மேலும் மாநாட்டின் பாதுகாப்புக்காக மாநாட்டு திடல் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற மாநாடுகளில் இதுவரை இல்லாத அளவு மாநாட்டின் முகப்பு தோற்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்கள் கோட்டை மதில் சுவரில் இடம் பெற இருக்கின்றன.
இதேபோல மொழிப் போர் தியாகிகளின் படங்களும் இடம்பெற இருக்கிறது. மாநாட்டில் கொள்கைகள் குறித்து விஜய் அறிவிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. திராவிட சித்தாந்தமா? அல்லது தமிழ் தேசிய சித்தாந்தமா? விஜயின் கொள்கை என்பதே தற்போது பேசு பொருளாக இருக்கிறது.
– கவிப்பிரியா