மாம்பழ சீசனை பயன்படுத்தி மாங்காய்களை பழுக்க வைக்க எத்திப்பான் போன்ற ரசாயன தெளிப்பான்களை பயன்படுத்தக் கூடாது என பழ வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் என்றாலே நினைவு வருவது மாம்பழம். மாம்பழ சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது. மாம்பழ வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் மாங்காய்களை செயற்கையான முறையில் பழுக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக எத்திப்பான் ரசாயனத்தை தெளிப்பான்கள் மூலம் நேரடியாக மாங்காய்களின் மீது தெளிப்பது, மாங்காய்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்துவது போன்ற செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து , உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் இன்று மாநகரில் பல்வேறு இடங்களில் மாம்பழ குடோன்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஓரிரு மாம்பழ குடோன்களில் எத்திப்பான் திரவத்தை நேரடியாக பழத்தில் தெளிப்பதை கண்டறிந்ததோடு, பழ வியாபாரிகளை எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாம்பழ மொத்த வியாபாரிகளுக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்த , மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன், அவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டப்படி மாங்காய்களை எவ்வாறு பழுக்க வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட மாம்பழம் மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் என்னென்ன தீங்கு ஏற்படும் என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் விளக்கினார். மேலும் இயற்கை முறையில் வைக்கோல்களை வைத்தும், புகை போட்டும் பழுக்க வைக்கப்படும் பழங்களின் நன்மை குறித்தும் எடுத்துரைத்தார்.