“அற்ப சிந்தனை” என சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா..? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி..?
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், உங்களில் ஒருவன் பதில்கள் மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.
“அப்பா” எனும் பொறுப்பு
கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால் தலைவர் என அழைக்கிறார்கள், தமிழகத்தின் முதலமைச்சர் ஆன பின் முதலமைச்சர் என்ற பெயர் கிடைத்தது. இப்படி பலரும் அழைத்து வந்த நிலையில், தற்போதையை தலைமுறையினர் அப்பா என்று அழைப்பது ஆனந்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். காலப்போக்கில் பொறுப்புகள் மாறினாலும், இந்த அப்பா என்ற உறவு மாறாது என குறிப்பிட்டுள்ளார்.
அற்ப சிந்தனை என்று சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா :
மேலும் பேசிய அவர், மாநில அரசின் நிதியை வைத்தே பல திட்டங்களை செய்து முடித்துக்கொள்ளும் படி, ஒன்றிய அரசு சொல்வதை சுட்டிக்காட்டி, மாநில அரசின் நிதியை வைத்து திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் ஒன்றிய அரசின் நிதி கிடைத்தால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார். அற்ப சிந்தனை என்று சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா..? என கேள்வி எழுப்பினார்.
கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா :
கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான்.
2019-இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச் சந்தித்துக் கொண்டு வருகிறோம். பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திமுக தலைமையிலான கூட்டணி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
டப்பிங் வாய்ஸ் பழனிசாமி :
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குரல், பாஜகவின் டப்பிங் குரல்போல உள்ளதாக விமர்சித்துள்ளார்.
பற்றி எரிந்த மணிப்பூர் :
மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அவராகப் பதவி விலகவில்லை, வேறு வழியில்லாமல் பதவி விலகியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மணிப்பூர் பற்றி எரிந்து வருகிறது. இதில் 220 பேருக்கு மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர். பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி பட்ட சூழலில் மாநிலத்தின் முதலமைச்சர் மேல் நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு, முதலமைச்சரை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறது. நடந்த வன்முறையின் பின்னணியில் மாநில முதலமைச்சரே சம்பந்தப்பட்டுள்ளார். அது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது. அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னும், ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..