“ஜெயிலர் திரைப்படம் வெளியாவதால் பால் விநியோகத்தில் கவனமுடன் செயல்படுங்கள்” என பால் முகவர்கள் தொழில்நலச் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் :
ஜெயிலர் திரைப்படம் வெளியாவதால் பால் முகவர்களுக்கு அறிவுறுத்தல் 09.08.2023
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் போதெல்லாம் அத்திரைப்படம் வெளியாகின்ற திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் அந்தந்த “நடிகர்களின் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம்” செய்கிறோம் என்கிற பெயரில் நூறடிக்கும் அதிகமான உயரம் கொண்ட கட்அவுட்கள் மீதேறி, உயிரைப் பணயம் வைத்து மிகப்பெரிய அளவில் மாலை அணிவித்து, பாலாபிஷேகம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் வீணாக்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதை நாம் அனைவருமே நன்கறிவோம்.
“நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெட பூமியில் எரிவதுண்டோ..?” என நாம் புளுங்கிக் கொண்டிருக்க, முன்னணி நடிகர்களின் ரசிகர்களோ உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து பாலினை வீணடிக்கும் வெறிச் செயல்கள் மட்டும் இந்த 21ம் நூற்றாண்டில் இன்னும் தணிந்தபாடில்லை.
எனவே தான் “ரசிகர்கள் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும்”, “ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்” என்கிற முயற்சியில் கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதை அனைவரும் நன்கறிவீர்கள்.
“நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுப்பதில் பால் முகவர்கள் சங்கத்திற்கு அப்படி என்ன அக்கறை…?” என பல தரப்பிலிருந்தும் தொடர்ந்து வினாக்கள் எழுப்பப்படுவதோடு, முன்னணி நடிகர்களை வைத்து பால் முகவர்கள் சங்கம் சுயவிளம்பரம் தேடுவதாகவும் தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் நம்மை பொறுத்தவரை “போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்” என்கிற அடிப்படையில் பால் முகவர்கள் நலன் சார்ந்தும், நம்மோடு வாழ்கின்ற இந்த சமுதாயத்தின் மீதான, குறிப்பாக வளரும் இளம் தலைமுறையினர் மீதான சமூக அக்கறையோடும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
அதிலும் தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து வலியுறுத்துவதற்கான காரணம் என்னவென்றால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில ரசிகர்களும், ரசிகர்கள் எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் சமூக விரோதிகளும் பால் முகவர்களின் கடைகளில் நள்ளிரவில் இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்டுகளை டப்புகளோடு திருடிச் செல்லும் சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ந்து அரங்கேறியுள்ளது என்பதையும், அதனால் பல பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழந்துள்ளனர்.
அதிலும் கடந்த 2022ம் ஆண்டில் நடிகர் திரு. அஜீத்குமார் அவர்களின் நடிப்பில் வெளிவந்த “வலிமை” திரைப்படம் வெளியான திரையரங்குகளின் வழியாக சென்ற பால் விநியோக வாகனங்களை மறித்து அதிலிருந்து பால் மற்றும் தயிரினை திருடி உயிரற்ற கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், தயிராபிஷேகம்” செய்த நிகழ்வுகள் நடந்ததையும், அதற்கு முன் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்பட வெளியீட்டின் போதும் பால் முகவர்கள் கடைகளில் இருந்து பால் பாக்கெட்டுகள் டப்புகளோடு களவாடப்பட்டதையும் நாம் எவரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
இது போன்று பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் சார்பிலும், நமது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பிலும் காவல்துறையில் பல மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டதையும், “கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் பாக்கெட்டுகள் திருடு போனால் நடவடிக்கை எடுக்க இயலாது” என காவல்துறை தரப்பில் கைவிரிக்கப்பட்டதையும் நாம் ஏற்கனவே கடந்த காலங்களில் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பதிவு செய்திருக்கிறோம்.
எனவே தான் பாலாபிஷேகம் என்கிற பெயரில் பால் முகவர்கள் பாலினை திருட்டு கொடுக்கும் சம்பவங்களும், பால் பாக்கெட்டுகளை களவாடும் நிகழ்வுகளும் நடக்கக் கூடாது, ரசிகர்கள் எனும் போர்வையில் இளம் தலைமுறையினர் சீரழிந்து, தங்களின் எதிர்காலத்தை விட்டில் பூச்சிகள் போல வீணாக்கி விடக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தி வீணாகிப் போவதையும், சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையில் முன்னணி நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் நாளை (10.08.2023) வியாழக்கிழமை அன்று முன்னணி நடிகரான திரு. ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகளவில் வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே திரு. ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் இரண்டாண்டுகளுக்கு முன் வெளியான “அண்ணாத்தே” திரைப்படம் வெளியான போது அவருடைய கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பொதுவெளியில் ஆட்டினை கொடூரமாக வெட்டி பலி கொடுத்து அதன் ரத்ததால் “ரத்தாபிஷேகம்” செய்ததை அவர் கண்டிக்காத நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தும் காவல்துறையினர் தரப்பில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், திரு. ரஜினிகாந்த் அவர்களின் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்த நிகழ்வுகளும் நடைபெற்ற போது அதனைக் கூட காவல்துறையினர் தடுக்கவும் இல்லை, தடை செய்யவும் இல்லை.
இந்த நிலையில் இரண்டாண்டு கால இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கும் இத்தருணத்தில் திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ஒரு சில ரசிகர்களும், ரசிகர்கள் எனும் போர்வையில் உள்ள சமூக விரோதிகளும் இன்று நள்ளிரவிலோ அல்லது நாளை அதிகாலை நேரத்திலோ பால் முகவர்களின் கடைகளில் இருந்து பாலினை திருட முயற்சி செய்யலாம்.
குறிப்பாக தமிழகம் முழுவதும் அத்திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் அருகாமையில் உள்ள பகுதிகளில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் கடைகளில் இருந்தோ அல்லது திரையரங்க வளாகங்கள் வழியாக செல்லும் பால் விநியோக வாகனங்களை வழி மறித்தோ பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகள் திருடப்படலாம் என்பதால் நமது வாழ்வாதாரத்தை நாமே காத்துக் கொள்ள கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆண்டு முழுவதும் பொதுமக்கள் அனைவரும் கண்ணயர்ந்து உறங்கும் நேரத்தில் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களாகிய நாம் அனைவரும் நித்தமும் கண்விழித்து தங்குதடையற்ற சேவையை வழங்குவதாக நம் பணி அமைந்திருப்பதால் இது போன்ற நேரங்களில் நாம் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது கண்டிப்பான அவசியமாகிறது.
பால் முகவர்களாகிய நாம் ஏற்கெனவே உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி அல்லல்பட்டு வருவதோடு, தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகிறோம். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியீட்டு சமயத்தில் ரஜினிகாந்த் அவர்களின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய “பாலினை டப்புகளோடு பறிகொடுத்தால் அந்த இழப்பை ஈடுகட்ட பால் முகவர்களாகிய நாம் பல நாட்கள் வருமானமின்றி பணியாற்றும் சூழல் ஏற்படும்”. மேலும் அனைத்திற்கும் நாம் “காவல்துறையை மட்டுமே நம்பிக் கொண்டும், அவர்கள் மீது குறை சொல்லிக் கொண்டும் இருப்பதிலும் அர்த்தமில்லை”.
எனவே இன்று (09.08.2023) நள்ளிரவு முதல் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் நள்ளிரவு தொடங்கி காலை 6.00மணி வரை தமிழகம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு, ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் திரையரங்க வளாகங்கள் அமைந்துள்ள சாலை வழியாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை பால் விநியோகம் செய்யச் செல்வதை தவிர்த்து மாற்றுப் பாதையை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கி, பால் முகவர்கள் அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்தை தற்காத்துக் கொள்ளுமாறும், அன்போடு கேட்டு கொள்கிறோம்.
மேலும் ரசிகர்கள் எனும் பெயரில் “சமூக விரோதிகள்” எவரேனும் பாலினை திருட முயற்சி செய்தால் இரவு பாதுகாப்பு பணியில் இருக்கும் பால் முகவர்கள் அவர்களை பிடித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைப்பதோடு அதனை புகாராக பதிவு செய்து அதற்கான உரிய ரசீது (CSR COPY) பெற்று கொண்டு உடனடியாக நமது சங்கத்தின் தலைமைக்கு தகவல் கொடுக்க வேண்டுகிறோம்.
நமக்கு இழப்பு ஏற்பட்ட பிறகு வருந்துவதை விட, இழப்பு ஏற்படும் முன் தற்காத்துக் கொள்வதே, குறிப்பாக வரும் முன் காப்பதே சாலச்சிறந்ததாகும் என பால் முகவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.