துரைவைகோவிற்கு சின்னம் கிடைச்சாச்சு..!! களத்திற்கு தயாரான மதிமுக..!!
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரைவைகோ திருச்சி தொகுதியில் போட்டியிட போவதாக தெரிவித்திருந்தார். பல ஆண்டுகாலமாக மதிமுக பம்பரம் சின்னம் வைத்திருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மார்ச் 14ம் தேதி அன்று சந்தித்து மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது எனவும், ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பொது சின்னத்தில் மட்டுமே போட்டியிட முடியும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் வாயிலாக மதிமுக வழக்கறிஞர்களுக்கு பதில் அளித்திருந்தது.
இதனிடையே, மதிமுக தனிச் சின்னத்தில் மட்டுமே தேர்தலில் களம் காணும் என உறுதிப்படத் தெரிவித்துள்ள மதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, பம்பரம் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு:
மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட போவதாகவும், மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறியிருந்தார்.
2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்ததாக கூறி பம்பரம் சின்னம் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மார்ச் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, மதிமுக மனுவிற்கு இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே இறுதி முடிவு என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..