சிம்பலான உருளைக்கிழங்கு ரைஸ்..!
உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இதனை சாப்பிடுவதினால் இதய நோய் உள்ளவர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது ரொம்ப நல்லது.
அனைவருக்கும் உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். இதில் குழந்தைகளுக்கு சாதம் சமைத்து கொடுங்க.
தேவையான பொருட்கள்:
- உதிரியாக வடித்த சாதம் 3 கப்
- 3 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
- மீடியம் சைஸ் வெங்காயம் 4
- மஞ்சள்தூள் 1 டீ ஸ்பூன்
- தனி மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
- சில்லி ஃப்ளேக்ஸ் 1 டீ ஸ்பூன்
- கரம் மசாலா தூள் 1 டீ ஸ்பூன்
- கல் உப்பு தேவைக்கு
- கறிவேப்பிலை சிறிது
- தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
- நெய் 1 ஸ்பூன்
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி சற்று பெரிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு வெந்ததும் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மஞ்சள்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் பொரித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
வடித்த சாதத்தை சேர்த்து அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
கொஞ்சம் சாப்பிட்டு பார்த்து உப்பு தேவைப்பட்டால் அதையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
அவ்வளவுதான் சிம்பலான உருளைக்கிழங்கு ரைஸ் தயார். இதனை குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸிலும் கட்டிக் கொடுக்கலாம், குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.