ADVERTISEMENT
எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலை துறை முறைகேடு!!
எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை இலாகாவை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி மீது 4 ஆயிரத்து 800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரை விசாரிக்க கோரிய ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வு முன் விசாரணை தொடங்கியபோது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கு ஏற்கனவே 3 முறை அனிருதா போஸ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளதாகவும், இந்த மனுவை நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், நீதிபதி எம்.திரிவேதி அமர்வு முன் விசாரணை நடைபெற்றால் என்ன தவறு என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என நீதிபதி எம். திரிவேதி அறிவித்துள்ளார்.
மேலும் இது குறித்த தங்களது கோரிக்கைகளை தலைமை நீதிபதி முன்பு வைக்கவும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.