மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட மூத்தாட்டி..! கொலையாளி போலீசில் சிக்கியது எப்படி..?
சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த விஜயா 78 வயது மூதாட்டி கட்டிட வேலை, மற்றும் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17 ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற விஜயா அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன அவரது மகள் லோகநாயகி விஜயாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து லோகநாயகி கொடுத்த புகாரில் அடிப்படையில் காணவில்லை என்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டி விஜயாவை திவீரமாக தேடினர். இந்த நிலையில் விஜயாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பார்த்திபன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு வரும் படி போலீசார் கடந்த 23 ஆம் தேதி அழைத்துள்ளனர்.
ஆனால் அடுத்த நாளே விசாரணைக்கு வராத பார்த்திபன் தனது மனைவி சங்கீதாவோடு சேர்ந்து வீட்டை காலி செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதனை அறிந்த போலீசார் அவர்களது செல்போன் எண்ணை ஆய்வு நடத்தினர்.
அபோது அவர்கள் விருதுநகர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதன்படி விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் உதவியோடு பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கிதாவை கைது செய்தனர். இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தி.நகர் காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் விருதுநகருக்கு விரைந்து அவர்களிடம் திவீர விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையில் பார்த்திபன், மற்றும் சங்கீதா இருவரும் சேர்ந்து விஜயாவை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து யாருக்கும் தெரியாமல் உடலை மூட்டை கட்டி அடையாற்றில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் குறித்து இதுவரை கூறப்படாத நிலையில் கைதான கணவன்- மனைவி இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும் என் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மூதாட்டியின் உடலை தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்