‘2021ல் நாங்க தான்’ சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக கொறாடா சக்கரபாணி, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மக்களுக்கு உரிய முறையில் பணம் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி, இந்த திட்டத்திற்கான பணத்தை மத்திய அரசு தான் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. இதில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

அப்போது குறுக்கீட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் வங்கிக்குச் சென்று பணத்தை எடுப்பதற்கு பயனாளிகள் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிச்சாமி “இந்த திட்டத்தை எதிர்த்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அதை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தால் அதனை தமிழக அரசு செயல்படுத்தும்” என்றும் கூறினார்.

மேலும், “உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறும் திமுக, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. பின்பு உண்மையை புரிந்து கொண்டதால் தான் இடைத் தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வெற்றியை தந்ததாகவும் கூறினார்.

அதே சமயம் வேலூர் தொகுதியிலும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றதாகவும், அங்குள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக அதிகவாக்குகளை பெற்றிருக்கிறது. இவையனைத்தும் மக்களிடத்தில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “மிக விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும்.அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், ” 2021ல் நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகளை, நாடாளுமன்ற தேர்தலின்போது ஏன் தெரிவித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு 2021ல் யாரை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” என்றும் தெரிவித்தார்.

What do you think?

‘YES Bank-ல் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது’ ரிசர்வ் வங்கி ஆளுநர் !

‘வெள்ளிக்கிழமை தூக்கு’ சர்வதேச நீதிமன்றத்தை நாடிய நிர்பயா வழக்கு குற்றவாளிகள்!