தமிழர்கள் மீட்பு நடவடிக்கை; வைகோவின் கோரிக்கைக்கு அயல் உறவுத்துறை விளக்கம்

ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என்ற மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின் கோரிக்கைக்கு, அயல் உறவுத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பூல்துரை, மலையாங்குளம் கந்தசாமி ஆகிய இருவரும் ஓமன் நாட்டில் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டு, நாடு திரும்ப வழியின்றித் தவித்து வருகின்றனர். அங்கே உள்ள தமிழர்கள் அவர்களுக்கு உணவும் தங்கும் இடமும் அளித்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை குறித்து வைகோ, அயல்உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்திற்குக் கொண்டு சென்றதோடு, தொடர்ந்து நினைவூட்டி வந்தார். மேலும், மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக தமக்கு தகவல்கள் வந்துள்ளதாக கூறியிருந்தார்.

இதிலுள்ள சில சட்டச் சிக்கல்கள் குறித்து அயலுறவுத்துறை அமைச்சகம், வைகோவிற்கு விளக்கமளித்துக் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில், மேற்கண்ட பிரச்சினையில் காலதாமதம் குறித்து வருத்தப்பட்டு, நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இந்த பிரச்சினையை மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம், தங்களுடைய நேரடி கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது நாள்தோறும் விசாரணை நடைபெறுகின்றது.

பூல்துரை, கந்தசாமி அவர்களை பணியில் அமர்த்தியிருந்த நிறுவனம் மற்றும் பிரவீன் தோமல், பி.டி. பத்மராஜ் ஆகிய மற்ற இரண்டு தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசிவருகின்றது. பூல்துரை, கந்தசாமி ஆகிய இருவரும் எம்ஓஎம்பியில் (MOMP) ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

15.1.2020 அன்று, நிறுவனத்தின் மீது குறைகூறி இந்தியாவில் ஒளிபரப்பான காணொளி குறித்து, இருவரும் மன்னிப்புக்கடிதம் கொடுத்தால், நிறுவனச் செலவில் அவர்களைஇந்தியாவிற்கு திருப்பி அனுப்பலாம் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக இவர்களால் பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு தொழிலாளிகள் பிரவீன் தோமல், பத்மராஜ் ஆகிய இருவரும், தங்கள் மீது அவதூறு பரப்பி காணொளி ஒளிபரப்பியதற்காக நடவடிக்கை எடுக்குமாறு சலாலா நீதிமன்றத்தில் இவர்கள் மீது ஒரு வழக்கு தொடுத்துவிட்டனர்.

இவர்கள் நால்வரையும் பிப்ரவரி 12 ஆம் நாள், தூதரகத்திற்கு வரவழைத்தோம். சமூக நலக்குழுவினரும் நானும் (தூதரக அதிகாரி) அவர்களோடு கலந்து பேசி பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்தோம். ஆனால், ஒரு முடிவும் ஏற்படவில்லை. தங்களை குற்றம் கூறி காணொளி பரப்பியதற்காக மன்னிப்புக் கேட்டு, மற்றொரு காணொளி பேசி ஒளிபரப்ப வேண்டும் என, பிரவீன் தோமல், பத்மராஜ் ஆகியோர் வலியுறுத்தினர். அதன்பிறகுதான், அவர்கள் மீது சலாலா நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கைத் திரும்பப்பெறுவோம் என்று கூறிவிட்டனர்.

இதற்கிடையே, முன்னணி வணிகரும், பொதுநல ஊழியருமான சலாலா மருத்துவர் சனாதன், (அல்-வாதேக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்) இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, நால்வரோடும் பேசி இணக்கமான தீர்வு காண முயன்று வருகின்றார். அடுத்த சில நாள்களில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

எம்ஓஎம்பியோடும் இந்திய அயலுறவு அமைச்சகத்தோடும் பேசி மேல் நடவடிக்கை குறித்து முடிவுசெய்வோம். இதுதொடர்பாக, தங்கள் ஒத்துழைப்பை நாடுகின்றோம் என்று, அயலுறவுத்துறை அமைச்சகம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அக்கடிதத்தில் விளக்கமளித்துள்ளது. .

What do you think?

CAA-நடிகர் ரஜினியுடன் இஸ்லாமிய உலமாக்கள் சந்திப்பு

2-வது டெஸ்ட்: நியூசிலாந்து வெற்றி; தொடரும் இந்தியாவின் ஒயிட்வாஷ்!