கள்ள காதலனை கொலை செய்து நாடகமாடிய பெண்…!! போலீசில் சிக்கியது எப்படி..?
புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸ் சந்து பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (40), ஆன்மீக சுற்றுலா ஏற்பாட்டாளர். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில். இவர் தனது வீட்டின் பாகத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்து விட்டு அங்கேயே வாடகைக்கு தங்கி வந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் சென்ற பொழுது சமையல் கலைஞரான புதுச்சேரி, வெள்ளார் வீதியை சேர்ந்த விஜி @ விஜயலட்சுமி (39) என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை பிறிந்து ஒரு மகனுடன் வாழும் விஜி அவபோது ரவிக்குமார் வீட்டுக்கு சென்று மது அருந்தி விட்டு உல்லாசமாக இருப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி காலை விஜி வீட்டுக்கு வெளியே வந்து ரவிக்குமாரின் அண்ணன் ராஜி மற்றும் அக்கம்பக்கதினரை அழைத்து இரவு மது அருந்தி விட்டு தூங்கிய ரவிக்குமார் தூக்கிட்டு கொண்டுள்ளார் என கதறி அழுதபடி கூறியுள்ளார். உடனே அவரது அண்ணன் மற்றும் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக ரவிக்குமாரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் என கூறி உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல்றிந்து வந்த முதலியார்பேட்டை போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் ரவிக்குமாரை யாரோ கழுத்தில் கடுமையாக தாக்கியதில் கழுத்து எலும்பு முறிந்து உள்ளதாகவும் மேலும் கழுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கப்பட்டதால் தான் அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் ரவிக்குமாருடன் இரவு தங்கிய விஜியை அழைத்து விசாரணை செய்ததில் அவர் தமக்கு எதுவும் தெரியாது என கதறி அழுது நாடகம் ஆடியுள்ளார். ஒரு கட்டத்தில் விஜியின் அழுகை நாடகத்தை நம்பி திகைத்து நின்ற போலீசார் இவ்வழக்கு தொடர்பாக அவர்களது பாணியில் கிடுக்கு பிடி விசாரணையில் ஈடுபட்ட பொழுது முன்னுக்கு பின் முரனாக விஜி பேசத் தொடங்கினார்.
தொடர் விசாரணையில், கடந்த 22ம் தேதி இரவு சேலத்தை சேர்ந்த ஜோதிடர் ராஜா, விஜி, மற்றும் ரவிக்குமாருக்கு பணியில் உதவியாக இருக்கும் சேதிலால் ஆகிய நான்கு பேரும் மது அருந்தி உள்ளனர். இதில் சேதிலால் வீட்டுக்கு சென்று விட ஜோதிடர் ராஜா வீட்டின் ஒரு அறையில் தூங்க சென்றுள்ளார். அப்போது விஜியும் ரவிக்குமாரும் மது அருந்தி கொண்டிருந்த போது ரவிக்குமார் தனது வீடு மீண்டும் விற்பனைக்கு வருவதாகவும் அதனை வாங்க வேண்டும் எனவும் அதற்கு விஜி கொஞ்சம் பணம் கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர் பணம் தருவதாகவும் வீட்டை தனது பெயரில் பதிவு செய்ய வேண்டும் என விஜி கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ரவிக்குமார் வீட்டை தனது பெயரில் தான் கிரயம் செய்ய போவதாக கூற இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விஜி மது போதையில் சாய்ந்து அமர்ந்திருந்த தனது கள்ளக்காதலன் ரவிகுமாரை கழுத்தில் மிதிக்க அவர் சம்பவ இடத்திலயே சரிந்துள்ளார்.
மேலும் விஜி அவர் கழுத்தில் கயிறைப் போட்டு இறுக்கி கொலை செய்து பின்பு தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியுள்ளார். மேலும் வீட்டிற்குச் சென்ற சேதிலாலை செல்போனில் அழைத்து நடந்ததை கூறியுள்ளார். உடனே இருவரும் நேரில் வந்து பார்த்த பொழுது ரவிக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில் ரவிக்குமார் தற்கொலை செய்ததாகவே இருக்கட்டும் என கூறி இருவரும் அங்கிருந்து கிளம்பி விட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலையை மறைத்ததாக சின்ன சேலத்தை சேர்ந்த ஜோதிடர் ராஜா, மற்றும் புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சார்ந்த சேதிலால் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கள்ளக்காதலி விஜி மற்றும் உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் உட்பட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.