இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட பிரபல தெலுங்கு நடிகரின் கட்டிடம்..!
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நாகர்ஜூனா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, வேறு சில தொழில்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்துள்ள நாகர்ஜூனா, ஐதராபாத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில், நிலத்தை வாங்கியிருந்தார்.
மேலும், அந்த பகுதியில், கன்வின்சன் என்ற பெயரில், கட்டிடம் ஒன்றையும் அவர் கட்டியிருந்தார். ஆனால், அந்த கட்டிடம், அப்பகுதியில் உள்ள தம்மி செருவு என்ற ஏரியையொட்டி ஆக்கிரமித்துக் கட்டியிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள், ஆய்வு நடத்தினர். அதில், 3.5 ஏக்கர் அளவிற்கு, நீர் நிலையை ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு சொந்தமான கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இது தொடர்பாக நடிகர் நாகர்ஜுனா ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த பதிவில் “சட்டவிரோதமாக எனது ‘N கன்வின்சன்’ கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. நாங்கள் சட்டத்திற்குப் புறம்பாக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. ஏரியின் இடம் சிறிதும் ஆக்கிரமிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட சட்டவிரோத நோட்டீஸ்க்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது தவறான தகவலை வைத்து கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நீதிமன்றம் எனக்கு எதிராகத் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே கட்டடத்தை இடித்திருப்பேன். தவறான நடவடிக்கைக்காக நிவாரணம் கோரப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
-பவானி கார்த்திக்