ஒட்டன்சத்திரம் அருகே சத்திரபட்டியில் காட்டு யானை மிதித்து விவசாயி சௌந்தரராஜன் பலி. சத்திரப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி புதுக்கோட்டையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விளைநிலங்களில் விவசாயிகள் பலரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விளை நிலங்களுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் வந்து செல்கிறது. சத்திரப்பட்டி புதுக்கோட்டையில் விவசாயி சௌந்தர்ராஜன் என்பவர் தோட்டத்திற்குள் யானை இரவு நேரத்தில் வந்துள்ளது.
யானையை விரட்ட சௌந்தர்ராஜன் முற்பட்டபோது விவசாயி சௌந்தரராஜனை யானை விரட்டிச் சென்று தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சௌந்தரராஜன் யானை தாக்கி பலியானது குறித்து சத்திரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரியிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து யானை தாக்கிய விவசாயிகள் பலியாவதாகவும், விளைநிலங்களுக்குள் யானைகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த வாரம் சிந்தலவாடம்பட்டி கிராமத்தில் விவசாயி தண்டபாணி என்பவர் யானை தாக்கி பலியானார். தற்போது மேலும் ஒரு விவசாயி யானை தாக்கி பலியான சம்பவம் விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.