பெண் காவலர்கள் உடல்நலம் காத்து நன்றாக இருந்தால் தான் காவல்துறை நன்றாக இருக்கும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கம் சார்பில், மருத்துவ முகாம் நேற்று(மார்ச்.09) நடைபெற்றது.
பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாமை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “சென்னை காவல்துறை இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் காவல்துறை உயர் அதிகாரிகள், காவல் ஆளுநர்கள் என மொத்தம் 23 ஆயிரம் பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இது தமிழ்நாடு காவல்துறையில் 21 சதவீதம் ஆகும். காவல்துறையில் பெண் காவலர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். அத்தகைய பெண் காவலர்கள் வருமுன் காப்போம் என்பதை கடைப்பிடிக்க வேண்டும். பெண் காவலர்கள் உடல்நலம் காக்க வேண்டும். அவர்கள் நன்றாக இருந்தால் தான் காவல்துறை நன்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.