தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் அடுத்த ஆடியோவை வெளியிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. முந்தைய ஆடியோவில், திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டனர் என்றும் அந்த மாதிரி அவர்களது முன்னோர்கள் கூட சம்பாதிக்கவில்லை என்று பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தற்போது DMK Files என்ற பெயரில் அண்ணாமலை பிடிஆரின் மற்றொரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். 57 நொடிகள் ஓடக்கூடிய அந்த ஆடியோவில் எனக்கு பாஜகவிடம் பிடித்ததே ஒருத்தருக்கு ஒரு பதவி மட்டுமே தருவது தான். இது பொறுப்புகளை நிர்வாகிக்க உதவுகிறது. இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏகளும் அமைச்சர்களும்தான் எடுக்கின்றனர். இதெல்லாம் ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும்தான். இப்போது நான் பதவியில் இருந்து விலகினால் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்” என்று பதிவாகியுள்ளது.
ஏற்கனவே முதல் ஆடியோ வெளியான போது எந்த புகாரும் தராமல் பிடிஆர் நழுவிச் செல்ல பார்ப்பதாகவும், என்ன தான் இது எனது வாய்ஸ் இல்லை என அவர் மறுத்தாலும் திமுக தொண்டர்களே அதனை ஏற்க தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது. தற்போது இரண்டாவது வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.