மாணவர்களுக்கு குட் நியூஸ்…. 1 லட்சமாக வழங்கப்பட்ட கல்வி கடன் 5 லட்சமாக உயர்வு….!
தமிழ்நாடு அரசின் சார்பில் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகக் கட்டணம், தங்குமிட கட்டணம், உணவுக் கட்டணம், டியூஷன் கட்டணம் என்பன உள்ளிட்ட பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வந்தது.
கல்விக் கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து, 6 மாதங்கள் கழித்து அடுத்து வரும் 5 வருடங்களுக்குள், கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்வி கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10% ஆகும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் மூலம், அங்கீகரிக்கப்பட்ட பட்டய படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் முறை படிப்புகளுக்கும் இந்த கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி கடன்கள் வழங்கப்படுகிறது.
இதே போல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் (டாம்கோ) சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ரூ. 1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு, கல்வி மிகவும் அவசியமாகும்.
அவ்வாறு கல்லூரி கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்க கூடாது என கருதி, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுபடி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் புத்தக கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், டியூஷன் கட்டணம் போன்று பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக ரூ. 1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இதனை மாணவர்கள் பயன்படுத்தி கல்விக் கடன் பெற்று, தங்களது கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ள வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பவானிகார்த்திக்