ஆசிரியர்கள் இல்லா அரசு பள்ளி..! வேதனையில் மாணவர்கள்..! ஆசிரியர்கள் வராததற்கு காரணம்..?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மலை கிராமமான பாஸ்மார் பெண்டா கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதற்குக் காரணம் மலை கிராமம் என்பதால் எந்த ஆசிரியரும் வருவதற்கு தயக்கம் காட்டுவதாக அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பள்ளி தொடங்கிய நாள் முதல் இந்தப் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்து வந்ததாகவும் அவரும் சில நாட்கள் விடுப்பில் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டதற்கு மாற்று ஆசிரியர்களை அந்த பள்ளிக்கு நியமித்துள்ளதாகவும் தெரிவித்தனர். சுமார் 150 மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் கடமைக்கு வந்து செல்வதாக மாணவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே அறையில் வைத்து அந்த ஆசிரியர் பாடம் எடுப்பதாகவும் இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் பெற்றோர்கள் இன்று பள்ளிக்குச் சென்று மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். பெற்றோர் தரப்பில் தெரிவிப்பது பெற்றோர்கள் நாங்கள் தான் படிக்கவில்லை. தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்கும் எங்களிடம் போதிய வசதி இல்லை.
அரசுப் பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைக்கலாம் என்று நினைத்தால் மலை கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மிகவும் வேதனை அளிப்பதாகவும் இதனால் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் நினைத்து மிகவும் கவலையாக இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மலை கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் பெற்றோர்கள் மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றும் பள்ளிக்கு பிள்ளைகள் அனுப்பவில்லை என பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..