ஹத்ராஸ் பலி எண்ணிக்கை..! உச்சநீதிமன்றம் மறுப்பு..! உயர்நீதிமன்றம் முடிவு..?
ஹத்ராஸ் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ்ஸில் உள்ள புல்ராய் கிராமத்தில் கடந்த மாதம் போலோ பாபா எனும் போலி சாமியார் நடத்திய மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, “ஹத்ராசில் மாநில அரசு, உள்ளூர் நிர்வாகம், காவல்துறையினர் என பலரும் இந்த விவகாரத்தில் கடமை தவறி செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை வைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் உயிரிழப்பு, கூட்டம் நடந்தது, எத்தனை பேர் இறந்தனர், அவர்களுக்கான இழப்பீடு என்ன, சட்டவிரோதமாக செயல்பட்டவர்களுக்கான தண்டனை என்ன என்பது பற்றி விரிவாக விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இதுபோன்ற கூட்டங்களில் உயிரிழப்பு அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு உத்தரவிட வேண்டும்.
ஹத்ராஸ் நிகழ்வுக்கு காரணமாக அமைந்த அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணை செய்யப்பட்டது. அப்போது, “ஹத்ராஸ் நிகழ்வு என்பது மிகவும் வேதனையான ஒன்று தான். அ தில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. அதனை ரசிக்கவும் முடியாது.
இருப்பினும் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும். அவர்களுக்கு வலுவான அதிகாரங்கள் உள்ளது. எனவே மனுதாரர் முதலில் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடரலாம்: என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..