“உன் பேர் சொல்ல ஆசைதான்….’ ‘குறுக்குச் சிறுத்தவளே…’ ‘மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர்தேடி வந்ததே….’ ‘அன்பே… அன்பே… கொல்லாதே….’ ‘வெண் மேகம் பெண்ணாக உருவானதோ….’ என 90ஸ் கிட்ஸ்களை காதலையும், காதல் தோல்வியையும் தனது வசீகர குரலால் மயக்கவைத்த மாயக்குரலோன் ஹரிஹரனுக்கு இன்று பிறந்தநாள்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ஏக்கச்சக்கமான பாடல்களை பாடி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகை ஆண்டு வரும் ஹரிஹரன் இசைத்துறைக்கான பொக்கிஷம். 1970களில் கஜல் பாடகராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி, இன்று இசையுலகின் வசீகர குரலோனாக வலம் வரும் ஹரிஹரன் குறித்து இதுவரை யாருமே அறியாத 10 சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…
1. ஹரிஹரனின் தந்தை அனந்த சுப்ரமணி ஐயர் ஒரு பிரபலமான இசைக்கலைஞர், அவரது தாயார் அலமேலு சிறந்த கர்நாடக இசைப்பாடகி. எனவே ஹரிஹரனின் ரத்தத்திலேயே இசை கலந்திருந்தது.
2. 1977 ஆம் ஆண்டு “அகில இந்திய சுர் பாடகர்” போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஹரிஹரன் பிரபலமானார். அவரது குரலைக் கேட்டு, மறைந்த இசையமைப்பாளர் ஜெய்தேவ் அவரது காமன் (1978) திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை வழங்கினார்.
3. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ரங்கீலா (1995) திரைப்படத்தில் “ஐ ராமா” பாடலை ஹரிஹரன் பாடியது அவரது பாலிவுட் இசைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து முன்னணி பாடகராக ஹரிஹரன் வலம் வர ஆரம்பித்தார்.
4. இந்திய இசைக்கான அவரது பங்களிப்புகளுக்காக, ஹரிஹரனுக்கு 2004 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தேசிய திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள், IIFA விருதுகள் மற்றும் குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
5. ஹரிஹரன் மற்றும் லெஸ்லே லூயிஸ் இணைந்து 1996 ஆம் ஆண்டு தொடங்கிய டூ-பீஸ் இசைக்குழுவின் பெயர் கொலோனியல் கசின்ஸ். டைனமிக் குழு இணைந்து பல மொழிகளில் சில சிறந்த இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளது.
6. ஏ.ஆர்.ரஹ்மான், உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே மற்றும் மெஹந்தி ஹாசன் ஆகியோர் ஹரிஹரனுக்கு பிடித்த இசைக்கலைஞர்கள் ஆவார்கள்.
7. ஹரிஹரனுக்கு பயணங்கள் செய்வதும், புத்தகங்கள் படிப்பதும் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு ஆகும். உணவைப் பொறுத்தவரை தென்னிந்திய மற்றும் இத்தாலிய உணவு வகைகளை மிகவும் பிடித்தவையாகும்.
8. ஹரிஹரன் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்றி வருகிறார். புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற காரணங்களுக்காக நிதி திரட்டுவதற்காக ஏராளமான தொண்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
9. இசைக்கு அடுத்தப்படியாக ஹரிஹரனுக்கு கோல்ஃப் விளையாட்டு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். பல கோல்ஃப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
10. ஹரிஹரன் பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளருமான லலிதாவை மணந்தார். இந்த இசை தம்பதிக்கு கரண் மற்றும் அக்ஷய் என இரண்டு மகன்கள் உள்ளனர்.