போதி தர்மர் திடீரென புகழ் பெற இவர் தான் காரணம்..!!
நான் ஒரு வரலாற்று ஆய்வு மாணவன். ஐந்து ஆய்வு நூல்களை எழுதி இருக்கின்றேன். ஆனால், இதுவரை இப்படி ஒரு செய்தியைப் படித்தது இல்லை..படமும் பார்த்தது இல்லை என எழுதி இருந்தேன்.
அந்தக் கல் எந்த ஊரில் இருக்கின்றது என்ற குறிப்பும், அந்தப் படத்தில் இல்லை. இதுகுறித்து, வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்ற சென்னை தம்பி இளங்கோ சம்பத்குமார் பின்னூட்டம் எழுதி இருந்தார்.
அண்ணா,
அசோகரின் கல்தூண் எதுவும் சீனாவில் கிடைக்கவில்லை. அசோகரின் பாறைக் கல்வெட்டுகள், தூண் கல்வெட்டுகள் கிடைத்த இடங்கள் இப்படத்தில் குறிக்கப்பட்டு உள்ளன என ஒரு வரைபடம் அனுப்பி இருக்கின்றார்.
இந்தத் தூண் அண்மைக் காலத்தில் அசோகரின் நினைவாக வைக்கப்பட்டு இருக்கலாம் என்று எழுதி இருந்தார்.
அவர் அனுப்பி இருந்த வரைபடத்தில் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் அசோகர் கல்வெட்டுகள் இருக்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு,
ஆப்கனிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றியபோது, உருவ வழிபாடு கூடாது என்ற இஸ்லாம் நெறிப்படி, பாமியான் மலைகளில் செதுக்கப்பட்டு இருந்த சுமார் 65 அடி உயரத்தில் இரண்டு புத்தர் சிலைகளை, அவர்கள் பீரங்கியால் சுட்டுத் தகர்த்து எறிந்த செய்தி, படங்களைப் பார்த்து மிகமிக வேதனை அடைந்தேன்.
இன்றைக்கும் அதை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது. அசோகருடைய கல்வெட்டுகள் தெற்கே கர்நாடகத்தில் பல இடங்களில் இருக்கின்றது.
தமிழ்நாட்டில் கிடையாது. பாடலிபுரத்திற்குக் கிழக்கே, இன்றைய அசாம் அன்றைய காமரூபத்தில் இல்லை. அசோகரின் ஆட்சி வடக்கு, மேற்கு, தெற்குத் திசைகளில் பரவி இருந்ததை அறிகின்றோம்.
ஆனால், கிழக்கில் போகவில்லை. பிற்காலத்தில், கிழக்கே சீனாவில் இருந்து வந்த
யுவான் சுவாங், ஃ பாஹியான் போன்ற பயணிகள்தான், இந்தியாவில் இருந்து ஓலைச்சுவடிகளைத் திரட்டிக்கொண்டு போனார்கள் என்பதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன.
அவற்றை அங்கே புத்த மடாலயங்களில் பாதுகாத்து வைத்தனர். அடுத்தடுத்த தலைமுறைகளில். பல நூறு ஆண்டுகளாக, தொடர்ந்து புதுப்பித்து, புதிய ஓலைகளில் எழுதி வந்தார்கள்.
ஆனாலும், திபெத் தொடங்கி கிழக்கு ஆசியாவில் சீனா, ஜப்பான், கொரியா, கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் முழுமையும் பௌத்தம் பரவி இருப்பது மிக மிக வியப்பாக இருக்கின்றது.
அங்கே அந்த நாடுகளில் எப்படிப் பரவியது என்பது குறித்து அறிய போதிய நூல்கள் எதுவும் தமிழில் இல்லை. தமிழ் ஆய்வாளர்கள் எவரும், மேற்கண்ட நாடுகளுக்குச் சென்று, இந்தக் கோணத்தில் ஆராய்ந்து எழுதியது இல்லை.
நான் 2013 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் போய் 300 பக்கங்கள் ஜப்பானில் அருணகிரி என்ற புத்தகத்தை எழுதினேன். 1932 இல் ஏ.கே. செட்டியார் 80 பக்கங்கள் எழுதி இருக்கின்றார்.
90 களில் லேனா தமிழ்வாணன் 40 பக்கங்கள் எழுதி இருக்கின்றார். வேறு எந்த எழுத்தாளரும், ஜப்பானைப் பார்த்து எழுதியதாகத் தெரியவில்லை. பார்க்காமலேயே பலர் கட்டுரைகள் எழுதி இருக்கின்றார்கள்.
நடிகர் சூர்யா எடுத்த ஒரு படத்தின் சில காட்சிகளால் போதி தர்மர் திடீரெனப் புகழ் பெற்றார். அதற்கு முன்பு படித்த வரலாற்றுப் புத்தகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை.
சினிமாவை நம்புவதற்கு இல்லை. விளம்பரத்திற்காக மிகைப்படுத்திக் காட்டுவார்கள். அது வரலாறும் அல்ல. எனவே, சீனாவுக்குப் போய், சில மாதங்கள் தங்கி இருந்து பௌத்தம் எப்படிப் பரவியது என்பது குறித்து மடாலயங்களில் ஆய்வு செய்து,
தமிழில் நிறைய தரவுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் இன்று விடிகாலையில் ஏற்பட்டது. அதற்கு வாய்ப்பும், வசதியும் வேண்டும். என்னால் முடியவில்லை என்றாலும், அடுத்த தலைமுறை இளைஞர்கள்,
இந்தக் கோணத்தில் நிறைய ஆய்வுகள் செய்து உண்மைத் தரவுகளை எழுத வேண்டும். உள்ளது உள்ளபடி எழுத வேண்டும்.
இப்போது சீனாவில் படிக்கின்ற, வேலை செய்கின்ற தமிழ் மாணவர்கள் இந்தக் கடமையைச் செய்யலாம். ஆனால், யூ ட்யூப் அரைவேக்காடுகள் போல, பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக, மிகைப்படுத்திப் பேசக் கூடாது. உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..