தஹானுவில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 21 வயதான கர்ப்பிணிப் பெண், மே 12 அன்று இரத்த சோகைக்கான சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC) நடந்து சென்று வந்த பிறகு வெப்பத் தாக்குதலால் இறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது கருவில் இருந்த குழந்தையும் இறந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,500க்கும் அதிகமான ஹீட் ஸ்டோக் மற்றும் மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார சேவை இயக்கத்தின் தரவுகளின் படி கடந்த ஆண்டை விட இறப்பு மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தஹானுவில் உள்ள பழங்குடியின கர்ப்பிணி பெண் வெப்பத்தால் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால்கர் மாவட்டம், ஓசார் வீரா கிராமத்தை சேர்ந்தவர் சோனாலி வாகத் (21). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சுமார் 3.5 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். வரும் 27-ம் தேதி அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் கடந்த 12-ம் தேதி அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. சாலை, வாகன வசதி இல்லாததால் 3.5 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுட்டெரிக்கும் வெயிலில் சோனாலி வாகத் நடந்து சென்றார்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர் சோனாலியை பரிசோதித்தார். இப்போது ஏற்பட்டிருப்பது பிரசவ வலி இல்லை, சாதாரண வலி என்று மருத்துவர் கூறினார். அதோடு மருந்து, மாத்திரைகளையும் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் 3.5 கி.மீ. தொலைவு நடந்து வீட்டுக்கு சோனாலி திரும்பி சென்றார். கடுமையான வெப்ப அலையில் சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு அவர் நடந்து சென்றதால் வீட்டுக்கு வந்ததும் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்துக்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த கருவும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.