ஆளுநர் ரவி தமிழ்நாடு என்று உச்சரிக்க மறுத்ததன் மூலம், காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன என்பது புலனாகிறது என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு சட்டப்பேரவை, 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.ஆளுநர் உரை என்பது, தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, பிறகு அச்சிடப்பட்டு அவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அந்த உரையை ஆளுநர் பேரவையில் வாசிப்பது என்பதுதான் சட்டப்பேரவை மரபு என தெரிவித்துள்ளார்
ஆனால் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட உரைக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்த பின்னர், அச்சிடப்பட்டு பேரவையில் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் அந்த உரையினை தமது விருப்பம்போல் மாற்றியும், சிலவற்றை நீக்கியும் எடுத்துரைத்து இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு அரசு என்று குறிப்பிட்டுள்ள இடங்களில் எல்லாம் ‘இந்த அரசு’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றிக் கூறியுள்ளதாகவும் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற கலைஞரின் மேற்கோளையும், திராவிட மாடல் அரசு என்பதையும் ஆளுநர் புறக்கணித்து இருப்பாதாக வைகோ தெரிவித்துள்ளார்
அதுமட்டுமல்ல, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்கள் பெயரையும் தமது உரையிலிருந்து நீக்கிவிட்டதாகவும் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்
திராவிட மாடல் அரசு, சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண் உரிமை, மதநல்லிணக்கம் ஆகிய வார்த்தைகள் ஆர்.எஸ்.எஸ். ரவிக்கு எட்டிக்காயாக இருந்ததால் திட்டமிட்டே புறக்கணித்து உள்ளதாகவும் வைகோ சாடி உள்ளார்
சட்டம் – ஒழுங்கு சிறப்பாக நிலைநாட்டப்படுவதால், தமிழ்நாடு அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது என்ற சொற்றொடரையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை எனவும் வைகோ தெவித்துள்ளார்
தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்காதது மிகவும் வருத்தத்திற்குரியது என்று தெரிவித்துள்ள வைகோ ஆளுநரால் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்று முதலமைச்சர் தீர்மானம் முன்மொழிந்து, நிறைவேற்றி இருப்பது ஆளுநருக்குச் சரியான பதிலடி என தெர்வித்துள்ளார்
தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையின் மரபை மீறி, அரசால் தயாரிக்கப்பட்ட உரையை மாற்றிப் படித்தது கடும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ள வைகோ இத்தகைய அடாவடிச் செயல்களை ஆளுநர் தமிழ்நாட்டில் நிகழ்த்தி வருவதை அனுமதிக்கவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும் இந்துத்துவா சனாதனக் கோட்பாட்டின் காவலராக தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநர் பதவியில் நீடிக்க எந்தத் தார்மீக அருகதையும் இல்லை என தெரிவித்துள்ள வைகோ உடனடியாக அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் இல்லையேல் குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறித்தி உள்ளார்