மணிப்பூர் தோன்றிய வரலாறு..
மணிப்பூர் தனி மாநிலமாக 21.1.1972-இல் உதயமானது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மக்கள் தொகை
இந்துக்கள் 41.39 விழுக்காடு
இசுலாமியர்கள் 8.40 விழுக்காடு
கிறித்துவர்கள் 41.29 விழுக்காடு
சீக்கியர்கள் 0.05 விழுக்காடு.
மணிப்பூரின் தலைநகரம் இம்பால். அதை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் ‘மெய்த்தேயி’’ (Meitei) இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 53 விழுக்காடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருட்டிணரை வழிபடுபவர்கள். வேளாண்மை தொழிலே முதன்மையான தொழிலாகக் கொண்டவர்கள். பழங்குடி மக்களைக் காட்டிலும் வளமாக உள்ளவர்கள். இவர்களே ஆட்சியதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவோராக உள்ளனர். 1992-இல் மண்டல் ஆணையத்தின் பரிந்துரை நடை முறைக்கு வந்த பிறகு இவர்கள் இதரப் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அறுபது பேர். இதில் மெய்த் தேயி இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் நாற்பது பேர். மணிப்பூர் மாநிலத்தின் மலைப் பகுதிகளில் முப்பத்து நான்கு வகையான மலைவாழ் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இதில் முதன்மையானவர்கள் குக்கி-சோமி நாகா இனத்தவர் ஆவர்.
இவர்கள் மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்கள் தொகையில் இவர்கள் 40.88 விழுக்காடு ஆவர். மலைவாழ் பழங்குடியினருக்கான (ST) பிரிவில் இவர்களுக்கு 31 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப் படுகிறது. இவர்களில் பெரும்பான்மையினர் கிறித்தவர்கள் ஆவர்.
வாக்கரசியலில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்காகப் பெரும்பான்மை இந்துக்களாக உள்ள மெய்த்தேயி மக்களை மலைவாழ் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக பா.ஜா.க ஆசை வார்த்தைகள் கூறிவந்தது.
தற்போது மணிப்பூரில் பா.ஜா.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. என். பைரோன் சிங் முதல மைச்சராக உள்ளார். அவர் மெய்த்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர். பா.ஜா.க -32, காங்கிரசு-5, ஜெ.டி.யூ.-6, நாகாலாந்து மக்கள் முன்னணி (N.P.F.)-7, மற்றவர்கள் 10 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
மெய்த்தேயி வகுப்பைச் சார்ந்த சிலர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வழக்குத் தொடுத்தனர்.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி.முரளிதரன் மெய்த்தேயி வகுப்பு மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரை செய்து நான்கு வாரங்களுக்குள் ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டுமென உத்தர விட்டார்.
இதனால் மலைவாழ் பழங்குடியினரான குக்கி-சோமி, நாகா இன பழங்குடி மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று அச்சமடைந்தனர். மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பழங்குடிகளின் தலைவர் தின்காங்க் லூங்க் காங்க்மேய் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி முரளிதரன், பழங்குடி தலைவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடுத்து அவரை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த மாநிலக் காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டார்.