வீட்டு வசதி குடியிருப்பு அதிகாரிகள் திடீர் சோதனை..! 330 தொகுதியிலும்..?
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் 9 அடுக்குமாடியில் 48 சொகுசு அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பு பகுதி மூன்றில் காலை முதல் மாலை வரை அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
நீதிமன்றம் அமைத்த வழக்கறிஞர் ஆணையர் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன. இந்தப் பணியில் வீட்டு வசதி வாரிய அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், உள்ளூர் திட்ட குழும அலுவலர்கள், என பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் முன்னிலையில் சர்வேயர்கள் பூங்கா மற்றும் விற்பனை பிரிவு மனை ஆகியவற்றை அளவீடு செய்தார்கள். இது தொடர்பான விவரம் வருமாறு-
சத்துவாச்சாரி பகுதி மூன்றில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மொத்தம் 37 பூங்காக்கள் உள்ளன. இதே பகுதியில் டபுள் ரோட்டில் சர்வே எண் 330- பகுதியில் 15 ஆயிரம் சதுர அடிகளில் காலி இடம் உள்ளது.
இது வீட்டு வசதிவாரியத்தின் விற்பனை மனை பிரிவு ஆகும்.அப்படி இருக்க மேற்படி இடத்தில்¢ 5000 சதுர அடி காலியிடத்தில் உள்ளாட்சி அமைப்பு சார்பாக சுமார் 2 கோடி மதிப்பீட்டில் அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டு கட்டிட பணிகளும் நடந்து வந்தன. இந்நிலையில் குடியிருப்போர் நல சங்கத்தினர் தொடர்ந்த வழக்கில் அந்த கட்டிடம் கட்டக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
அதில் மீதமுள்ள 10,000 சதுர அடியில் வீட்டு வசதி வாரியத்தின் ஒரு அலுவலக கட்டிடம் இருந்தது. அது பயன்படுத்தப்படாமல் இருந்தபடியால் அதை அகற்றி விட்டு அந்த இடத்தில் 9 அடுக்கு சர்வீஸ் அபார்ட்மெண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் அந்த இடத்தில் 9 அடுக்கு மாடியில் ஏ.சி.வசதியுடன் கூடிய 48 சொகுசு அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ரூபாய் 12 கோடியில் துவங்கப்பட்ட திட்டம் தற்போது 18 கோடி வரை செலவு பிடிக்கும் என்று கூறப்படுகிறது தெரிகிறது.கட்டிடப் பணிகளும் ஓரளவுக்கு நடந்து முடிந்துவிட்டது.
ஆனால் அதற்கு தடை கோர வேண்டும் என்று ரெசிடென்சியல் வெல்பர் அசோசியேசன் என்பவர்கள் மீண்டும் நீதிமன்றத்தின் நாடியதாக தெரிகிறது. அதன் பேரில் நீதிமன்றம் ஒரு ஆணையம் அமைத்து அவர்கள் முன்னிலையில் அதிகாரிகளை வைத்து அந்த இடத்தை அளவீடு செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதாம். அதன் பேரிலேயே அதிகாரிகள் டீம் அளந்தனராம். அதுமட்டுமின்றி பகுதி மூன்றில் உள்ள 37 பூங்காக்களையும் அளவீடு செய்தனர்.
அதிகாரிகள் அளவீடு செய்த பல பூங்காக்களில் மின்வாரிய சர்வீஸ் ஸ்டேஷன், வி.ஏ.ஓ. அலுவலகம், ரேஷன் கடை அம்மா உணவகம், உடற்பயிற்சி கூடம் மற்றும் கோயில்கள் போன்றவை அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கையில், வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான சர்வே எண் 330 பகுதியில் ஏற்கனவே உள்ளாட்சி துறையினர் கட்டிடம் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தின் வாயிலாக தடை பெற்றுவிட்டனர்.
அதனால் அந்த கட்டிடம் கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது இந்நிலையில் வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்படும் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டை அங்கு கட்டக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக உள்ளனர். ஏனென்றால் அந்த இடத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் தனிநபர்கள் கார் பார்க்கிங்காக பயன்படுத்துவது தடைபடும் என்கின்ற உள் நோக்கமே இதற்கு காரணம்.
அதற்காகவே அரசு திட்டத்தை தடுக்கிறார்கள். இத்தனைக்கும் தற்போது அமைக்கப்பட்டு வரும் அபார்ட்மெண்ட், வீட்டு வசதி வாரியத் துறையின் விற்பனை பிரிவு வீட்டு மனை ஆகும். பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் கிடையாது. அதேபோல் பகுதி 3 ல் போக்குவரத்து கழகம் சார்பாக திருமண மண்டபம் ஒன்று செயல்பட்டு வந்தது அதற்கான குத்தகைகாலம் முடிந்து விட்டதால் அதை மாற்றிவிட்டு அந்த இடத்தில் வேறு கட்டிடப் பணிகள் துவக்க உள்ள நிலையில் அதை கூட வர வேண்டாம் என்று தடுக்க முயல்கிறார்கள்.
இந்த பகுதியில் வீடு கட்டுபவர்கள் அங்கிகரிக்கப்பட்ட வரைபடம் படத்தின் படி வீடு கட்டுவதில்லை. ஆனால் முறையாக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை தடுக்கிறார்கள், அதே போல் பூங்காவில் கோவில் கட்டும் போதெல்லாம் உடனிருந்து ஊக்குவித்து விட்டு இப்போது எதிர்கிறார்கள் என்று வேதனையோடு சொல்கிறார்கள்.
– லோகேஸ்வரி.வெ