நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக கடந்த மாதம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டிருந்தார்.
சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரத்தின கல் ஆகியவை திருடு போயுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என ஐஸ்வர்யா தனது புகாரில் தெரிவித்ததை அடுத்து, போலீசார் பணியாளர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஈஸ்வரி என்பவர் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது ஈஸ்வரியைக் கைது செய்து எம்.ஜி.ஆர். நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திருடிய நகைகளை வைத்து சோழிங்கநல்லூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு வாங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணம் மற்றும் 20 சவரன் நகைகளை மீட்டுள்ளனர்.