மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக இளவரசி பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.
இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துகளை கூறியதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையில், மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது.
இதனை தொடர்ந்து, விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று(மார்ச்.21) காலை சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜரானார். அப்போது பேசிய அவர், ”அப்பல்லோ மருத்துவமனையில்,ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும்”, அவர் கூறினார்.
மேலும், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவரது உடல்நலக்குறைவுடன் இருந்தார் எனவும் இளவரசி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.