மக்களவையில் மக்களின் குரலை ஒலிப்பேன்..! துரைவைகோ எம்.பி. பேச்சு..!
திருச்சி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ போட்டியிட்டு வெற்றி பெற்றார். தோ்தலில் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். மாவட்ட செயலரும், பள்ளிக் கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா் மொகிதீன் உள்ளிட்டோர் தோ்தல் வெற்றி குறித்து பேசினா்.
கூட்டத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய துரை வைகோ தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி அடிமட்ட கூட்டணி தொண்டா்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் திருச்சி மக்களின் குரலாக, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் குரலாக, விளிம்பு நிலை மக்களின் குரலாக மக்களவையில் ஒலிப்பேன் என்றார்..
அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்க பணிகள் குறித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, விமான நிலைய இயக்குனர், மாவட்ட துணை ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர், தேசிய நெடுஞ்சாலைகள் துறை கோட்ட பொறியாளர், விமான நிலைய வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
-லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..