மெரினா பீச் போறீங்களா.. அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க..!
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை சென்னையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு மறுடெண்டர் விடும் வரை வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டது .
குறிப்பாக சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்மார்ட் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டது.
அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் போன்ற இடங்களில் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5-ம், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி விதிகளை மீறி பஸ், வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை எனவும் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்ததுள்ளது.
இது ஒரு புறம் இருக்க , ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் மேற்கொண்டு அந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை நீடிக்காமல், சென்னை மாநகராட்சி அதிரடியாக ரத்து செய்துள்ளதது.
இதை எதிர்த்து அந்த தனியார் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ‘தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இது குறித்து, மாநககராட்சி தரப்பில் பேசுகையில், “சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் செலுத்த வேண்டாம்.
இலவசமாக வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். அதனை மீறி யாரேனும் மிரட்டி கட்டணம் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்