பயன்படுத்திய டீ தூளும் இதற்கு பயன்படுமா..? தூக்கி எறிய வேண்டாம்..!
நம் வீடுகளில் தினமும் டீ போடும் பழக்கம் உள்ளது. ஆனால் அதற்கு பயன்படுத்திய டீத்தூளை நாம் தூக்கி எறிந்து குப்பையில் தான் போடுவோம். ஆனால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள், தூக்கி எறியும் டீத்தூளின் அருமை தெரிந்திருந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள். அப்படி பயன்படுத்திய டீத்தூளை கீழே சொல்லியிருக்கும் முறையில் பயன்படுத்தலாம்.
முக கருமை நீக்க:
நாம் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் சூரிய ஒளியால் உண்டாகும் முக கருமையை போக்க இந்த டீத்தூள் பயன்படுகிறது. ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் டீத்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்து பின் அப்படியே சிறிது நேரத்திற்கு காயவிட்டு பின் முகத்தை கழுவி வரலாம்.
கை கழுவுவதற்கு:
அசைவ சாப்பாடு சாப்பிட்ட பிறகு நம் கைகளில் வரும் வாடையை போக்க நாம் சோப்பு போட்டு கழுவினாலும் அந்த வாடை முழுவதுமாக போகாது. அந்த நேரங்களில் சிறிது இந்த டீத்தூளை எடுத்து கைகளில் நன்றாக ஸ்கரப் செய்து கழுவினால் நல்ல வித்தியாசம் தெரியும்.
கரும்புள்ளியை போக்கும்:
இந்த டீத்தூள் முகத்தில் ஒரு ஸ்கரப்பாக பயன்படுத்தலாம். மூக்கின் மேல் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் நீக்குவதற்கு டீத்தூளை எடுத்து முகத்தில் மசாஜ் செய்தால் போதும் அப்படியே போய்விடும். முகத்தின் மற்ற இடங்களிலும் இந்த டீத்தூளை பயன்படுத்தி ஸ்கரப் செய்தால் முகம் பளிச்சென்று மாறி பளபளப்பாகும்.
ஈக்களை விரட்டலாம்:
வீட்டில் இனிப்பு வகை பலகாரம் செய்யும்போதும், பழங்கள் வெட்டி வைக்கும்போதும், அசைவம் சமைக்கும் இடத்திலும் ஈக்கள் அதிகமாக மொய்த்து நம் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அந்த நேரங்களில் இந்த டீத்தூளை சிறிது தூவி விட ஈக்கள் வருவது குறையும்.
செடிகளுக்கு உரமாக்கலாம்:
உங்கள் வீட்டில் வைத்திருக்கும் காய்கறி செடிகள், பூச்செடிகள் ஆகியவற்றிற்கு இந்த டீத்தூள் ஒரு சிறந்த உரமாக இருக்கும். செடிகளை சுற்றி இந்த டீத்தூளை தூவி விடலாம். செடிகளுக்கு இது சத்தாக மாறி செடிகள் நன்றாக செழித்து வளர வழிவகுக்கும்.