கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக தூண்பாறை பகுதியில் யானை உருவம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாவை அனுபவிக்க பலரும் தற்போது வருகை புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் பிரதான சுற்றுலா பகுதிகளாக இருக்கும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளது.
இந்த தூண்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யானைகளின் உருவங்கள் தத்ரூபமாக தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது . இந்த யானை சிற்பம் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைந்து இந்த பணிகள் முடிவடையும் என கொடைக்கானல் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் . மேலும் தூண்பாறை நுழைவு வாயில் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக இயற்கை சார்ந்த ஓவியங்கள் சுவரில் வரைய இருப்பதாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.