மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்..!! மகிழ்ச்சியில் கரூர்..!!
கரூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்கள் இருப்பிடத்திற்கும், வீடு வீடாக சென்று வழங்கும் பணி துவக்கம்.
கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மக்கள் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் வீடு வீடாகவும், நாடக மேடைகளிலும் பொதுமக்கள் இருப்பிடத்திற்கு சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பத்தை ரேஷன் கடை பணியாளர்கள் விநியோகம் செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 583 நியாய விலைக் கடைகளும், 3 லட்சத்து 38 ஆயிரத்து 871 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் முதல் கட்டமாக நடைபெறும் முகாமில் பங்கேற்கும் வகையில் 390 நியாய வகை கடைகளை சேர்ந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 386 அட்டைதாரர்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
ரேஷன் கடை பணியாளர்கள், ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்கி வருகின்றனர்.