நியூசியுடன் முதல் டெஸ்ட்; தடுமாறிய இந்தியா – காப்பாற்றி விடுமா மழை?

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பாசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் நம்பிக்கையுடன் களம் இறங்கினர். ஆனால், துவக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்த பிரித்விஷா 16 ரன்களில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா 11 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ரன்மெஷினும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி 2 ரன்களிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை சேர்த்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 29 ரன்களிலும், ரஹானே 2 ரன்களிலும் களத்தில் இருந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய அகர்வால் 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்டை காப்பாற்ற போராடினார். மறுமுனையில் ஆடிய விகாரியும் 7 ரன்கள் மட்டும் போதுமென விரைவாக நடையை கட்டினார்.

அவரைத் தொடர்ந்து ரஹானேவுடன் ரிஷப் பன்ட் கைகோர்த்தார். தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 38 ரன்களுடனும், ரிஷப் பன்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது, மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

போட்டி தொடங்கும்போதே மழை தூறல் விழுந்ததால், ஆடுகளம் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. தேநீர் இடைவேளையின்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

இந்தியன்-2 விபத்து; கமல், சங்கர் இருவருக்கும் போலீசார் சம்மன்?

மகா சிவராத்திரி; ஆலயங்களில் குவியும் பக்தர்கள்