இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி – கமல் வேதனை

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த விபத்தில், கிரேன் ஆப்ரேட்டர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கமல்ஹாசன் – சங்கர் கூட்டணியில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் இரவு பகலாக படப்படிப்பு நடைபெற்று வரும் நிலையில், நேற்றிரவு (பிப்-19) லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று திடீரென அறுந்து விழுந்தது.

இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது, சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 9 பேர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கு காரணமான கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

விபத்து தொடர்பாக டிவிட்டரில் தனது அனுதாபத்தை பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், “எத்தனையோ விபத்துக்களை கடந்திருந்தாலும், இந்த விபத்து கொடூரமானது, 3 சகாக்களை இழந்து நிற்பதாக வேதனை தெரிவித்துள்ளார்”. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பட தயாரிப்பு நிறுவனமான லைகாவும், மிகச்சிறந்த, கடின உழைப்பாளிகள் 3 பேரை இழந்து இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் என்பது தெரியவந்துள்ளது. மதனின் இளைய மகள் அமிதாவும் கிருஷ்ணாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

அவிநாசி அருகே கோர விபத்து – 20 பேர் பலி

மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு