இந்தியன் 2 விபத்து; கிரேன் ஆப்ரேட்டருக்கு ஜாமீன்

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆப்ரேட்டருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்பட தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள், 12 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் ராஜன், லைக்கா தயாரிப்பு நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 தரப்பினர் மீதும் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த கிரேன் ஆப்ரேட்டர் ராஜனை நசரத்பேட்டை காவல்துறையினர் கடந்த வெள்ளி கிழமை கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட கிரேன் ஆப்ரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

What do you think?

மத சுதந்திரம் பற்றி டிரம்ப் மோடியிடம் பேசுவார் – வெள்ளை மாளிகை

நியூசி டெஸ்ட் இந்திய அணி போராட்டம்