போதை தலைக்கேறிய ஆசாமிகள்.. இறுதியில் போலீசாரை தாக்கிய பகீர் சம்பவம்..!
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன் அன்னூர்-சத்தி சாலையில் உள்ள பசூர் ஊராட்சிக்குட்பட்ட பொங்கலூர் கிராமத்தில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மூன்று இளைஞர்கள் சாலை நின்று மது அருந்தி கொண்டிருந்தனர். அதனை பார்த்த போலீசார், அவர்களிடம் இங்கு மதுஅருந்த கூடாது எனவும் அங்கிருந்து கிளம்பும்மாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் போலீசாருக்கும் அந்த மூன்று இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் போதையில் இருந்த மூன்று இளைஞர்களும் சேர்ந்து காவலர்களை தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து காவலர்கள் அது குறித்து அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சக போலீஸார் காவலர்களை தாக்கிய மூன்று இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கிருத்திக், ஈஸ்வரன், பிரதீஷ் என்பதும், மூவரும் பொங்கலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அன்னூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்